பட்டுக்கோட்டை அருகே பட்டதாரி பெண் மர்ம சாவு: கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
பட்டுக்கோட்டை அருகே பட்டதாரி பெண் மர்ம சாவு தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை:-
பட்டுக்கோட்டை அருகே பட்டதாரி பெண் மர்ம சாவு தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரி பெண்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மாளியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் ராஜேஷ்(வயது 34). இவர், பட்டுக்கோட்டையில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வாணக்கன்காடு பகுதியைச் சேர்ந்த சாமிவேல் என்பவரது மகளும், பட்டதாரியுமான துர்காதேவிக்கும்(27) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஹரிஸ், 1½ வயதில் கபிலேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
சாவில் மர்மம்
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துர்காதேவி தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த துர்காதேவியின் பெற்றோர் மாளியக்காடு வந்துள்ளனர்.
தனது சகோதரி துர்காதேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய தம்பி அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் உடலை கைப்பற்றிய அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக துர்காதேவியின் கணவர் ராஜேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் சாலைமறியல்
இந்த நிலையில் நேற்று காலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் முன்பு குவிந்த துர்கா தேவியின் உறவினர்கள் துர்காதேவியை அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து கொன்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த பட்டுக்கோட்டை போலீசார், சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.