பெண்ணை கொலை செய்து விட்டு மும்பையில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவர் கைது
போச்சம்பள்ளியில் சந்தையில் மனைவியை கொலை செய்துவிட்டு, 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் மும்பையில் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூர் மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகள் மயில். இவருக்கும், சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த மயில், தனது தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்ததோடு, சந்தைகளுக்கு சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி போச்சம்பள்ளி சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த சக்திவேல், மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயம் அடைந்த மயில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மும்பையில் கைது
இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போச்சம்பள்ளி போலீசார் தப்பியோடிய சக்திவேலை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சக்திவேலை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மேற்பார்வையில் பாரூர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சக்திவேல் மும்பையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பைக்கு விரைந்த தனிப்படை போலீசார் கடந்த 24-ந் தேதி சக்திவேலை கைது செய்தனர். பின்னர், போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலையாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பாராட்டினார்கள்.