நிழல் இல்லாத நாள்

கொடைக்கானல் பகுதியில் நிழல் இல்லாத நாள் நிலவியது

Update: 2021-08-26 17:01 GMT
கொடைக்கானல்:

சுழல்கிற பம்பரம் நிற்பதற்கு தலையை ஆட்டுவது போல், பூமி 23.5 டிகிரி கோணத்தில் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகிறது. இதனால் பருவகாலம் ஏற்படுகிறது. 

இதேபோல் சூரியன் நமக்கு நேர் உச்சிக்கு வரும்போது, நிழல் இல்லாத நாள் நடைபெறுகிறது. இது, ஆண்டுக்கு 2 முறை நிகழும். நிழல் இல்லாத நாள் என்பது, பூமியின் சுழல் பாதையை புரிந்து கொள்வதற்கான நாள் ஆகும்.

 அதன்படி கொடைக்கானல் நகரில் நேற்று மதியம் 12.22 மணிக்கு நிழல் இல்லாத நாள் நிலவியது. இதனை, கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வானியல் ஆய்வு மையம் விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்தனர். 

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் எபினேசர், செல்வேந்திரன் ஆகியோர் கூறுகையில், கொடைக்கானல் பகுதியில் நேற்று மதியம் 12.22 மணிக்கு சூரியன் நேர் உச்சியில் வந்ததால் நமது நிழல் பூமியில் விழவில்லை.  நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வை பொதுமக்கள் தங்களது இல்லங்களில் இருந்து கண்டுகளித்தனர். இதுகுறித்து எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்