ஊட்டியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

ஊட்டியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

Update: 2021-08-26 16:56 GMT
ஊட்டி

ஊட்டியில் தொடர் மழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

ஊட்டியில் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் காலை 11.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேல் கனமழையாக பெய்தது. இதனால் கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழையால் ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் செடிகளில் ரோஜா மலர்கள் உதிர்ந்து, அழுகியும் வருகின்றன. மழையின் நடுவே சுற்றுலா பயணிகள் சிலர் குடைகளை பிடித்தபடி பூங்காக்களை ரசித்து சென்றனர். ஊட்டி படகு இல்லத்தில் கனமழையின் போது சிறிது நேரம் சவாரி நிறுத்தப்பட்டு, பின்னர் படகுகள் இயக்கப்பட்டது. 

தடுப்புச்சுவர் இடிந்தது

தொடர் மழையால் சாலையோரங்களில் உள்ள மண் ஈரப்பதமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி கோத்தகிரி-சாலை மேல் கோடப்பமந்து பகுதியில் நெடுஞ்சாலை துறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. 

சத்தம் கேட்டு வீடுகளில் உறங்கி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்தனர். அப்போது, கற்களால் ஆன தடுப்புச்சுவர் பெயர்ந்து சாலையில் சிதறி கிடந்தது. தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் 2 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. 

மேலும் அருகே உள்ள தடுப்புச்சுவரில் விரிசல் உள்ளதால் விழும் அபாயம் உள்ளது.  இதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


மேலும் செய்திகள்