ெசப்.1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க ஏற்பாடு: ஆசிரியர்கள்-அலுவலக பணியாளர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்

ஆசிரியர்கள்-அலுவலக பணியாளர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்

Update: 2021-08-26 16:13 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி செப்.1-ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கூடம் திறக்க ஏற்பாடு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி திறப்பதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் செந்தில் ராஜ் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் சுகாதாரத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட பள்ளிகள் திறப்பு குறித்த அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் உடல் நிலையை அவ்வப்போது கண்காணித்து ஆலோசனைகள் வழங்க ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்களை சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி துறையினர் மாவட்டத்தில் உள்ள 88 அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு கிருமி நாசினி தெளித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களை சுத்தம் செய்திடவும், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யவும் போக்குவரத்து வசதிகள், குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி ஏற்படுத்துதல், பழுதடைந்த கட்டிடங்களை சரிசெய்தல் முதலான ஆயத்தப்பணிகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
உடல் வெப்பநிலை
விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்குப் புதிதாக படுக்கை வசதி ஏற்படுத்தித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்தல், 3 வேளைகளில் (காலை, மதியம், மாலை) கைகளை சுத்தம் செய்தல், தடுப்புகள் பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும், தொற்று பாதித்த நபர்களை பள்ளிக்கு வராமல் வீட்டில் இருக்கச் செய்யவும் முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் 6 அடி இடைவெளியில் குறியிட்டு அதில் மாணவர்களை செல்லவும், உடல் வெப்பநிலை அறியும் கருவி, ஆக்சிமீட்டர்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். பள்ளி தொடங்கும் முன்பு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி பள்ளிகள் திறப்பு குறித்த அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் பள்ளி வளாகங்களில் 4 அல்லது 5 இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.
தடுப்பூசி கட்டாயம்
அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளபடி ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும். இதற்காக வருகிற 28-ந் தேதி ஆழ்வார்திருநகரி புனித மாற்கு மேல்நிலைப்பள்ளி, மூக்குப்பீறி, கருங்குளம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, செய்துங்கநல்லூர், கயத்தார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம் டி.எம்.பி.மெக்காவாய் மேல்நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம், புதூர் இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி, சாத்தான்குளம் புலமாடன் செட்டியர் மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம், திருவைகுண்டம் கே.ஜி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி ஊரகம் புதுக்கோட்டை டி.என்.டி.டி.ஏ. பி.எஸ்.பி.மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி நகர்புறம் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பள்ளிகளில் தமிழக அரசின் சுகாதாரத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் போஸ்கோராஜா, பொற்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபானி, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் சசிரேகா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்