கயத்தாறில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகைகள் திருடிய 2 பெண்கள் கைது கூட்டாளியும் சிக்கினார்
ஆசிரியையிடம் நகைகள் திருடிய 2 பெண்கள் கைது
கயத்தாறு:
கயத்தாறு பகுதியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகைகள் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியையிடம் திருட்டு
கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் இவரது மனைவி சுதா (வயது 35). இவர் கயத்தா று வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார வள மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 23-ந் தேதி நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். கயத்தாறு பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது, தனது கைப்பையில் இருந்த 20 பவுன் நகைகள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில்,கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் மேற்பார்வையில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோணிதிலிப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், காவலர்கள் பாலகிருஷ்ணன், பாலமுருகன், சத்திரியன், பெண் காவலர்கள் முனீஸ்வரி, முத்து லதா, செல்வி, முருகேஸ்வரி, ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில், ஆசிரியையிடம் நகைகளை திருடியது தூத்துக்குடி அண்ணாநகர் அய்யப்பன் மனைவி காளியம்மாள் (23), முத்துராஜ் என்ற கீரி மனைவி முத்துமாரி என்ற தமிழரசி (22) என்பது என தெரிய வந்தது. இவர்கள் சுதாவின் பையிலிருந்து தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது.
3 பேர் கைது-நகைகள் மீட்பு
மேலும் இவர்கள் தூத்துக்குடி வடபாகம் நாலாட்டின்புத்தூர், மற்றும் தூத்துக்குடி சிப்காட் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 10 பவுன் நகையை திருடி இருப்பதும் திருடிய நகைகளை அம்பாசமுத்திரம் வடக்கு ரத வீதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் அய்யப்பன்( 35) என்பவரிடம் கொடுத்ததும், இவர், அந்த பெண்களின் கூட்டாளி என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 35 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் காளியம்மாள் முத்துமாரி என்ற தமிழரசி மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டி வெகுமதி் வழங்கினார்.