போக்குவரத்து சிக்னலை ரிமோட் மூலம் இயக்கும் போலீசார்

போக்குவரத்து சிக்னலை ரிமோட் மூலம் இயக்கும் போலீசார்

Update: 2021-08-26 15:30 GMT
கோவை
கோவை டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே போக்குவரத்து சிக்னலை ரிமோட் மூலம் போலீசார் இயக்குகிறார்கள்.

போக்குவரத்து சிக்னல்

கோவையில் வாகனங்களின் பெருக்கத்தினால் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

எனவே போக்குவரத்தை ஒழுங்கு படுத்த கோவை அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, ஒப்பணக்கார வீதி, சக்திரோடு, காந்திபுரம் உள்பட மொத்தம் 52 இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சிக்னல் உள்ள இடங்களில் ரோட்டின் நடுவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கூண்டில் அமர்ந்து போலீசார் சிக்னல்களை இயக்கி வருகின்றனர். 

போலீசார் இல்லாத நேரங்களில் தானியங்கி முறையில் சிக்னலை இயங்க செய்வார்கள்.

ரிமோட் வசதி

இந்த நிலையில் கூண்டிற்கு வெளியே ரோட்டின் ஓரத்தில் நின்றபடி போக்குவரத்து சிக்னலை போலீசார் ரிமோட் மூலம் இயக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு  உள்ளது. 

அதன்படி கோவை டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே உள்ள போக்கு வரத்து சிக்னலை ரிமோட் மூலம் போலீஸ்காரர் ஒருவர் இயக்கி வருகிறார்.

இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து பிரிவு போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது 

கோவை மாநகரில் தற்போது 52 சிக்னல்கள் உள்ளன. கூடுதலாக 9 இடங்களில் சிக்னல்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. 

போக்குவரத்து போலீசாரின் பணியை எளிமையாக்க சிக்னல்களை ரிமோட் மூலம் சிக்னலை இயக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ரிமோட் மூலம் 100 மீட்டர் தூரத்தில் இருந்து கூட சிக்னலை இயக்க முடியும்.

பச்சை விளக்கு

ரிமோட்டில் 8 எண்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் சிக்னலை திறக்க ஒரு எண் பதிவு செய்யப்பட்டு இருக்கும். 

அதில் எந்த வழித்தடத்துக்குரிய எண்ணை போலீஸ்காரர் அழுத்துகிறாரோ அந்த வழித்தடத்தில் பச்சை விளக்கு எரிந்த உடன் அங்கு நிற்கும் வாகனங் கள் செல்லலாம். 

மேலும் அந்த ரிமோட்டை பயன்படுத்தி தானியங்கி முறையிலும் சிக்னலை இயக்க முடியும் 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்