6 வழிச்சாலையை மாற்று வழியில் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் அடுத்த மாதம் 7-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்

6 வழிச்சாலையை மாற்று வழியில் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் அடுத்த மாதம் 7-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-26 13:24 GMT
6 வழிச்சாலை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.இந்த சாலை தச்சூர் கூட்டுச்சாலை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பருத்திமேனிகுப்பம், தொளவெடு, பனப்பாக்கம், சென்னங்காரனை, பாலவாக்கம், பேரண்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இருப்பினும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை அமைய உள்ள மார்க்கத்தில் அளவு கற்கள் நட்டனர். பல கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அனைத்து கூட்டங்களிலும் 6 வழிச்சாலைக்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்து வந்தனர்.

நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை
இந்த நிலையில் இனி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறாது என்றும், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்கள் கிரையப்பத்திர நகல், மூலப்பத்திர நகல், கம்ப்யூட்டர் சிட்டா, ரேஷன்கார்டு நகல், மற்ற சான்றுகளின் நகல்களை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தால் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என்று நஷ்ட ஈடு மதிப்பீட்டு குழு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.ஒரு சில விவசாயிகள் மட்டும் மேற்கூறப்பட்ட சான்றுகளை அதிகாரிகளிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலானோர் வழங்கவில்லை.

7-ந் தேதி உண்ணாவிரதம்
இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக திருவள்ளூர் மாவட்ட கிளை தொடக்க விழா மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.மாவட்ட தலைவர் ஆஞ்சநேயலு தலைமை தாங்கினார். மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.அப்போது விவசாயிகள் 6 வழிச்சாலையை மாற்று வழியில் அமைக்க வேண்டும் ஏகமனதாக தெரிவித்தனர்.

பின்னர் பி.ஆர். பாண்டியன் பேசியதாவது:-
6 வழிச்சாலையை மாற்று வழியில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் அடுத்த மாதம் 7-ந்தேதி ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும் செய்திகள்