சென்னையை அழகுபடுத்தும் பணிகளுக்கான ஆலோசனை கூட்டம்; மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடைபெற்றது
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின்கீழ் அழகுபடுத்தும் பணிகளை மேற்கொள்வது குறித்து தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள், சாலையோரங்கள் மற்றும் சாலை மைய தடுப்புகளில் மரக்கன்றுகளை நடவு செய்து அழகுபடுத்தவும், அரசு, மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய கட்டிட சுவர்களில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான வண்ண ஓவியங்களை வரைதல், மாநகராட்சி பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பொது கழிவறைகளை தூய்மையாக பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகளை தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சியுடன் இணைந்து சென்னை மாநகரை அழகுபடுத்தவும், CSR நிதி வழங்கவும் ஆர்வமுள்ள தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சியின் https://forms.gle/CFtSbqfgpR9uzA8LA என்ற இணையதள இணைப்பில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்யலாம்.
இக்கூட்டத்தில் ஈக்யுட்டாஸ் வங்கி அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சி.கே.கரியாலி, துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த் (பணிகள்), டி.சினேகா (கல்வி) உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.