துபாயில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் ரூ.60 லட்சம் தங்கம் கடத்தல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.;

Update: 2021-08-26 09:05 GMT
அப்போது துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அதில் வந்த சென்னையை சேர்ந்த 27 வயது வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.அதில் அவரிடம், கரண்டி, தட்டு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வைக்கும் சில்வரால் ஆன ‘ஸ்டாண்டு’ இருந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அதில் இருந்த கம்பிகள் சற்று பருமனாக இருந்ததால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த கம்பிகளை தனித்தனியாக பிரித்து எடுத்து சோதனை செய்தனர்.

அதில் தங்கத்தை கம்பிபோல் மாற்றி, அந்த ‘ஸ்டாண்டு’ கம்பிக்குள் மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்