ஊட்டி
ஊட்டி மார்லிமந்து அணையையொட்டி உள்ள வனப்பகுதிகளில் செந்நாய்கள் கூட்டம் காணப்படுகிறது. அங்கு தண்ணீர் குடிக்க வரும் மான்களை செந்நாய்கள் வேட்டையாடி வருகிறது. இதனால் கரையோரங்களில் எலும்பு கூடுகள் கிடந்தன. தொடர்ந்து வனத்துறையினர் செந்நாய்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் செந்நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சமீபத்தில் காமராஜ் சாகர் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த கடாமான்களை செந்நாய்கள் கூட்டமாக வேட்டையாடியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடியிருப்பை ஒட்டி செந்நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இடம்பெயர்ந்து வந்த செந்நாய்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் அணை பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.