ஊட்டியில் 5 டன் காய்கறிகள் தேக்கம்

ஊட்டியில் 5 டன் காய்கறிகள் தேக்கம்

Update: 2021-08-26 08:59 GMT

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை செய்த காய்கறிகளை விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை மூட்டைகளில் விற்பனை செய்ய கொண்டு வந்தனர். அப்போது வாடகை செலுத்தாத கடைகளை சீல் வைக்கும் பணி நடந்ததால் மண்டிகள் மூடப்பட்டது. காய்கறிகளை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் காய்கறிகள் மூட்டைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது சில வியாபாரிகள் கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பஜ்ஜி மிளகாய், பீட்ரூட், முள்ளங்கி, புரூக்கோலி உள்ளிட்ட காய்கறிகளை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறிகள் ஏலம் நடைபெறாததால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை திரும்பி எடுக்க வந்தனர். 

ஆனால், சீல் வைக்கும் பணிக்காக நுழைவுவாயில் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதனால், திரும்பி எடுத்து செல்ல முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

ஊட்டி மார்க்கெட்டில் 5 டன் காய்கறிகள் தேக்கம் அடைந்து இருக்கிறது. மேலும் ஊட்டியில் இருந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்