ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கூண்டோடு இடமாற்றம்- கமிஷனர் உத்தரவு
சேலத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரை கூண்டோடு இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.
சேலம்:
சேலத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரை கூண்டோடு இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.
கூண்டோடு இடமாற்றம்
சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக கந்தவேல் பணியாற்றினார். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய கந்தவேல், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஆகிய 6 பேர் வேறு போலீஸ் நிலையங்களுக்கு திடீரென கூண்டோடு இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் பள்ளப்பட்டிக்கும், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அம்மாபேட்டைக்கும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி சேலம் டவுனுக்கும், சிவன் அன்னதானப்பட்டிக்கும், சந்திரசேகர் அஸ்தம்பட்டிக்கும், ஏட்டு பாஸ்கர் கிச்சிப்பாளையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். புகார் அடிப்படையில் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியது.
3 ஆண்டுகள்
இதுகுறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கும்மராஜா கூறும் போது, ஒரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணி நிறைவு மற்றும் நிர்வாக காரணமாக அவர்கள் 6 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
இதனிடையே காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் அழகாபுரத்துக்கும், இன்ஸ்பெக்டர் சம்பங்கி சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கும், நில அபகரிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மாநகர குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.