நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி; நேபாள காவலாளிகள் 2 பேர் கைது
பெங்களூருவில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற நேபாள நாட்டு காவலாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எச்சரிக்கை மணி ஒலித்ததால் அவர்கள் போலீசில் சிக்கினர்.
பெங்களூரு: பெங்களூருவில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற நேபாள நாட்டு காவலாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எச்சரிக்கை மணி ஒலித்ததால் அவர்கள் போலீசில் சிக்கினர்.
2 பேர் கைது
பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுப்பயண்ண பாளையா, பானசாவடி மெயின் ரோட்டில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அந்த நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து 2 மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் நிறுவனத்தில் உள்ள லாக்கரை மா்மநபர்கள் உடைக்க முயன்றனர். அப்போது அங்குள்ள எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் சுதாரித்து கொண்ட காவலாளி, நிதி நிறுவனத்திற்குள் சென்று பார்த்த போது, 2 கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி பானசாவடி போலீசாருக்கு, காவலாளி தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். உடனே நிதி நிறுவனத்தில் இருந்து 2 பேர் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து கைது செய்தார்கள்.
ரூ.4 கோடி நகைகள் தப்பியது
போலீஸ் விசாரணையில், அவர்கள் 2 பேரும் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக 2 பேரும் வேலை பார்த்து வந்துள்ளனர். எளிதில் பணம் சம்பாதிக்க அவர்கள் ஆசைப்பட்டுள்ளனர். இதையடுத்து, நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்று, அங்குள்ள லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் 2 பேரும் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்துள்ளது.
நிதி நிறுவனத்தில் உள்ள லாக்காில் ரூ.4 கோடிக்கு தங்க நகைகள், பணம் இருந்தது தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில் காவலாளியும், போலீசாரும் சேர்ந்து கொள்ளையர்களை பிடித்ததால், ரூ.4 கோடி தங்க நகைகள் அவர்கள் கையில் சிக்காமல் தப்பியது தெரியவந்துள்ளது. கைதான 2 காவலாளிகள் மீது பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.