டிரைவர் பலி; 3 பேர் படுகாயம்
ஒட்டன்சத்திரம் அருகே டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே நீலாங்காளிவலசை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). விவசாயி. நேற்று இவர், அவருடைய உறவினர்களான உமாதேவி (36), சங்கீதா (35) ஆகியோருடன் காரில் திண்டுக்கல் சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை பட்டுதுறை துலுக்கவலசை சேர்ந்த தங்கவேல் (50) என்பவர் ஓட்டினார்.
சின்னக்காம்பட்டி-இடையகோட்டை ரோட்டில் கோமாளிபட்டி பிரிவு என்னுமிடத்தில் எதிரே வந்த டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் டிரைவர் தங்கவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் பயணம் செய்த ராமசாமி உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.