துணை ராணுவ வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

75-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியை நோக்கி சைக்கிள் பயணம் சென்ற ராணுவ வீரர்களை திண்டுக்கல் மாவட்டம் கொைடரோடு அருகே போலீஸ் சூப்பிரண்டு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Update: 2021-08-25 19:54 GMT
திண்டுக்கல்: 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, கடந்த 22-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய துணை ராணுவ படையினர் சைக்கிள் பேரணியை தொடங்கினர். துணை ராணுவப்படை அதிகாரிகள் முகமது பயாஸ், வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் 60 பேர் கொண்ட குழுவினர் பேரணியாக செல்கின்றனர். இவர்கள், வருகிற அக்டோபர் 2-ந்தேதியன்று (காந்தி ஜெயந்தி) டெல்லியில் சைக்கிள் பேரணியை நிறைவு செய்கின்றனர்.

இந்தநிலையில் துணை ராணுவ வீரர்களின் சைக்கிள் பேரணி, திண்டுக்கல் மாவட்ட எல்லையான கொடைரோடு அருகே உள்ள காமலாபுரம் பிரிவுக்கு வந்தடைந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்ட போலீஸ் துறை சார்பில், பேரணியில் பங்கேற்ற துணை ராணுவ வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, துணை ராணுவ வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும், பழங்கள் வழங்கியும் வரவேற்றார். மேலும் துணை ராணுவ வீரர்களுக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செய்தார். 

மேலும் காமலாபுரம் பிரிவில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் துணை ராணுவ வீரர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சைக்கிள் ஓட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ராணுவ படை வீரர்கள் சங்கம், ஜம்புத்துரை கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பவுன் தாய் காட்டுராஜா மற்றும் கிராம மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேபோல் ஒட்டன்சத்திரத்துக்கு சைக்கிளில் பேரணியாக வந்த துணை ராணுவ படையினருக்கு, திண்டுக்கல் கலெக்டர் விசாகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

மேலும் செய்திகள்