கிருபானந்தவாரியாரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாட்டம்
காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியாரின் 115-வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காட்பாடி
காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியாரின் 115-வது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருபானந்த வாரியார்
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் காங்கேயநல்லூர் உள்ளது. இங்குதான் கிருபானந்த வாரியார் 1906-ம் ஆண்டு பிறந்தார். தீவிர முருக பக்தரான இவர் முருகனின் புகழை உலகம் முழுவதும் சென்று பரப்பினார். தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் சென்று சொற்பொழிவாற்றினார்.
இவர் சிவனருட் செல்வர், கந்தவேல் கருணை, பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு உள்பட 150-க்கும் மேற்பட்ட நூல்களையும், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 1993-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்் தேதி இந்தியா திரும்புகையில் விமானத்திலேயே மரணமடைந்தார்.
அரசு விழாவாக...
தமிழுக்காக தொண்டாற்றிய கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று காங்கேயநல்லூர் பொதுமக்களும், ஆன்மிக பக்தர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக வேலூர் மாவட்டத்துக்கு வருகை வந்த அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருபானந்த வாரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
முதல் முறையாக...
அதைத்தொடர்ந்து நேற்று கிருபானந்தவாரியாரின் 115-வது பிறந்தநாள் அரசு விழாவாக முதன் முறையாக கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்தவாரியாரின் ஞான வளாகத்திற்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா உள்பட பலர் உடனிருந்தனர்.
கிருபானந்த வாரியாருக்கு காங்கேயநல்லூரில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த நினைவிடத்தில் அவருக்கு வெண்கல சிலை வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என வாரியாரின் பக்தர்களும், காங்கேயநல்லூர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.