அரசு பஸ் டிரைவரை வாளால் வெட்டிய 2 பேர் மீது வழக்கு
நங்கவரம் குறிச்சியில் அரசு பஸ் டிரைவரை வாளால் வெட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நச்சலூர்,
திருச்சி மாவட்டம், சுப்பிரமணிய நகரை சேர்ந்தவர் சிங்காரம். இவர் அரசு நகர பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து 9.50 மணியளவில் உறையூர், குழுமணி வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு நங்கவரம் குறிச்சிக்கு சிங்காரம் அரசு பஸ்சை ஓட்டி வந்துள்ளார். மாடுவிழுந்தான் பாறையை சேர்ந்த தவசுமணி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார்.கோப்பு அயிலாபேட்டை அருகே பஸ் வந்த போது எதிரே வந்த கோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், சூரியனூர் மேலப்பட்டியை சேர்ந்த இளவரசன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பஸ்சை உரசுவது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, டிரைவர் சிங்காரம் சுதாரித்து பஸ்சை இடது பக்கம் சாலை யோரம்நிறுத்தினார். மோட்டார் சைக்கிளில் வந்த கிருஷ்ணன் மற்றும் இளவரசன் இருவரும் சேர்ந்து சிங்காரத்தை தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சமாதானம் செய்து அரசு பஸ்சை அனுப்பி வைத்தனர். பஸ்சை எடுத்து கொண்டு டிரைவர் சிங்காரம் குறிச்சிக்கு சென்று நிறுத்தியுள்ளார். பின்னர் அங்கு வந்த கிருஷ்ணன், இளவரசன் ஆகிய இருவரும் சேர்ந்து டிரைவர் சிங்காரத்தை வாளால் வெட்ட முயன்றனர். அப்போது சிங்காரம் தனது கையால் தடுத்துள்ளார். இதில் கையில் வெட்டுப்பட்டு காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர். சிங்காரத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் சிங்காரம் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் போரில் கிருஷ்ணன், இளவரசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.