அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம். 31-ந் தேதி நடக்கிறது
அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் வருகிற 31-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர்
அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன்பெற சிறப்பு முகாம் வருகிற 31-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் வீடு
தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் வேலூர் கோட்டத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் குளவிமேடு பகுதியில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகளில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை மறு குடி அமர்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும் நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கும் (பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கு) வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள பயனாளிகளின் பங்குத்தொகையான ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பயனாளிகள் செலுத்த வேண்டும்.
சிறப்பு முகாம்
மேலும் அனைவருக்கும் வீடு என்ற திட்ட விதிகளின்படி மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு குளவிமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர், அவர்களின் பெயரிலோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை என்றும், மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் உள்ளது என்றும் சான்றளிக்க வேண்டும்.
பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகம், 9 வது தெரு, கோபாலபுரம், கழிஞ்சூர் என்ற முகவரியில் வருகிற 31-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.