தமிழக வளர்ச்சிக்கு பா.ஜ.க. தடையாக இருக்கிறது
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. தடையாக இருக்கிறது என்று மன்னர்குடியில் கே.எஸ். அழகிரி கூறினார்.
மன்னார்குடி:
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. தடையாக இருக்கிறது என்று மன்னர்குடியில் கே.எஸ். அழகிரி கூறினார்.
பேட்டி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலப்பு பொருளாதாரம்
ரூ.6 லட்சம் கோடி பெறுமானமுள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க பா.ஜ.க. முயற்சி எடுத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மேம்பட பொதுத்துறையும், தனியார் துறையும் இருக்கவேண்டும். இதற்கு பெயர் தான் கலப்பு பொருளாதாரம். இதை முன்னாள் பிரதமர் நேரு பின்பற்றினார்.
ஆனால் மோடி அரசு தவறான பொருளாதார கொள்கையினால் இந்தியாவின் பொருளாதாரத்தை பாழ்படுத்துகிறார்கள். தமிழக காங்கிரஸ் அதை வன்மையாக கண்டிக்கிறது.
தடையாக இருக்கிறது
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. தடையாக இருக்கிறது. காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் முயற்சிக்கிறது. அதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உறுதுணையாக இருக்கிறது. கர்நாடக அரசு வரைவு திட்டத்தை ஏற்பாடு செய்ய மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது. அது மரபுபடி தவறானது.
காவிரி நீரை பயன்படுத்தும் பிற மாநிலங்களின் அனுமதி பெற்றுதான் வரைவு திட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரி அனுமதி பெறாமல் மத்திய அமைச்சகம் அனுமதி தந்திருக்கிறார்கள். அது பிற மாநிலத்தை வஞ்சிப்பதாகும். தேசத்தின் பொது சொத்துகள் அனைத்து மாநிலத்திற்கும் பொதுவானது. அதை கர்நாடகம் மட்டும் அனுபவிப்பது தவறானது. மத்திய அரசு அதற்கு துணைபோக கூடாது என எச்சரிக்கிறோம்.
அ.தி.மு.க. பதில் சொல்ல வேண்டும்
தனியார் மயத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. பொதுத்துறையை தனியாராக மாற்றக்கூடாது என்பதுதான் காங்கிரசின் நிலைப்பாடு. ஜெயலலிதாவின் மரணம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து அறிந்து கொள்வதில் மற்ற அரசியல் கட்சியினரை விட அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் உள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்புகிறார். அ.தி.மு.க. அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
நாடாளுமன்றமும், சட்டசபையும் விவாதம் செய்வதற்கான இடம். அங்கு கேள்வி கேட்க கூடாது என்பது என்ன நியாயம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 100 நாளில் நிறைவேற்ற முடியாது. தேர்தல் வாக்குறுதி 5 வருடத்திற்கானது.
வெற்றிகரமான செயல்
பெட்ரோலுக்கு கலால் வரி ரூ.3 குறைத்தது, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியது, பொருளாதாரத்திற்கான வெள்ளை அறிக்கை, விவசாயத்திற்கான தனி வரவு-செலவு திட்டம், அதில் இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை உள்ளிட்ட தமிழக அரசின் 100 நாள் என்பது வெற்றிகரமான செயல்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வீரமணி, மன்னார்குடி நகர தலைவர் கனகவேல் ஆகியோர் உடனிருந்தனர்.