அ.தி.மு.க. மாவட்ட மகளிரணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவலத்தில் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க. மாவட்ட மகளிரணி இணை செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவலம்
திருவலத்தில் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க. மாவட்ட மகளிரணி இணை செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் குண்டு வீச்சு
வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 34). இவர் வேலூர் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் திருவலம் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராகவும் இதற்கு முன்பு பதவி வகித்து வந்தார். இவருக்கும் திருவலம் அருகே உள்ள அம்முண்டி பகுதியை சேர்ந்த பால் வியாபாரி சந்தோஷ் குமார் (33) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம் போல இரவில் சுலோச்சனா தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தியிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் குமார் பெட்ரோல் குண்டை சுலோச்சனா வீட்டின் மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த அவரது காரின் மீது பெட்ரோல் குண்டு விழுந்து தீப்பிடித்தது. இதனால் காரின் பின்பகுதி எரிந்து சேதமானது.
பால் வியாபாரி கைது
இதுகுறித்து திருவலம் போலீசில் சுலோச்சனா புகார் அளித்தார். அதன்பேரில் திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் அ.தி.மு.க .பெண் நிர்வாகியின் கார் தீயில் எரிந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.