மடத்துக்குளம் பகுதியில் பெய்துள்ள பலத்த மழையால் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை

மடத்துக்குளம் பகுதியில் பெய்துள்ள பலத்த மழையால் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை

Update: 2021-08-25 17:09 GMT
போடிப்பட்டி,
மடத்துக்குளம் பகுதியில் பெய்துள்ள பலத்த மழையால் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கனமழை
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மடத்துக்குளம் பகுதியில் பெய்த கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி காய்கறிப் பயிர்கள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இன்றைய நிலையில் விவசாயம் என்பது சவாலான விஷயமாக மாறி விட்டது. விளையாட்டுப் பிள்ளைகள் வெள்ளாமை வீடு வந்து சேராது என்பார்கள். ஆனால் இன்றைய நிலையில் அனுபவ விவசாயிகள் செய்த வெள்ளாமையே வீடு வந்து சேருமோ, சேராதோ என்று தவிக்கும் நிலையே உள்ளது.
மகசூல் இழப்பு
மாறுபட்ட பருவநிலை விவசாயிகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கடும் வெயில் காலங்களில் கனமழையும், கனமழைக் காலங்களில் கடும் வெயிலும் அடிப்பது சகஜமான விஷயமாக மாறிவிட்டது.
இதனால் அடிக்கடி பயிர் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் தண்ணீர்ப் பற்றாக்குறை என்பது பொதுவான விஷயமாக மாறிவிட்டதால் பெரும்பாலான விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மாறிவிட்டனர். இதனால் அதற்கு ஏற்றவகையில் பாத்திகள் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்துள்ளோம்.
நிவாரணம்
தற்போது பெய்துள்ள பலத்த மழையால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் பல விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பயிர்கள் அழுகி பெருமளவு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.  அதிலும் குறிப்பாக அறுவடை நிலையிலிருந்த சின்ன வெங்காயப் பயிர்கள் தண்ணீர் தேங்கியதால் அழுகி வீணாகும் நிலை உள்ளது.
ஏற்கனவே கூலி ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலை உயர்வு, காய்கறிகள் விலை குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வருகிறோம். தற்போது சின்ன வெங்காய விதைகள் மற்றும் இடுபொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவு செய்துள்ளோம்.எனவே அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு  விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்