போலி முகவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்
உரம், பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்யும் போலி முகவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
பொள்ளாச்சி
உரம், பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்யும் போலி முகவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள உழவர் மையத்தில் உள்ள கூட்டரங்களில் உரம், பூச்சி மருந்து மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) புனிதா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் போலி உரம், பூச்சி மருந்துகள் விற்பனை செய்ய கூடாது என்றார்.
இதில் அலுவலர் (தரக்கட்டுப்பாடு) சக்திவேல், வடக்கு ஒன்றிய வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஷீலாபூசலட்சுமி, தெற்கு உதவி இயக்குனர் நாக மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை ஒன்றிய வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் போலி முகவர்கள் தொடர்பாக தோட்டங்கள் மற்றும் உரக்கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. விவசாயிகள் வாங்கும் உரத்திற்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்ய கூடாது.
மேலும் போலி அங்கக உரங்கள் விற்பனை செய்யும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் போலி முகவர்கள் மீது உரக்கட்டுப்பாடு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.