அவினாசியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றுவிட்டு யாரோ கொலை செய்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
அவினாசியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றுவிட்டு யாரோ கொலை செய்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
அவினாசி:
அவினாசியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்றுவிட்டு யாரோ கொலை செய்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
பெண் கொலை
திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜ் வீதி வி.எஸ்.வி. காலனியில் வசிப்பவர் விஜயன் (வயது 35). இவர் அவினாசியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு ஹர்னிகா (7), ஹர்சினி (5) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பிரியா வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி, ஒரு ஜோடி கம்மல், வெள்ளிக்கொலுசு ஆகியவை மாயமாகி இருந்தது.
போலீஸ் விசாரணை
இது குறித்து தகவலறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த பிரியாவை நகைக்காக யாரோ கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் பிரியாவின் கணவரான விஜயனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் தான், தனது மனைவி பிரியாவை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இது குறித்து அவினாசி போலீசார் கூறியதாவது:-
கள்ளத்தொடர்பா?
விஜயன்-பிரியா இடையே கடந்த ஒரு வருடமாக தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் விஜயன் குடி போதையில் அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டதுடன், அவரது நடத்தையிலும் சந்தேகப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு விஜயன் சென்று விட்டார். அங்கு சென்ற பின்னர் பனியன் நிறுவனத்திலிருந்து மனைவிக்கு போன் செய்துள்ளார். சுமார் ஒரு மணிநேரமாக போன் செய்தும் பிரியா எடுக்காததால் மனைவி மீது சந்தேகம் மேலும் அதிகரித்தது. பிரியா வேறு ஒருவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த விஜயன் வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில் குழந்தைகளும் வீட்டில் இல்லாத நிலையில் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே பிரியாவை விஜயன் கீழே தள்ளினார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இருப்பினும் இருவரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டிலிருந்த பூரி கட்டையால் விஜயன் பிரியாவை கொடூரமாக தாக்கியதுடன், துண்டு மற்றும் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மேலும் அவர் அணிந்திருந்த சங்கிலி, கம்மல், வெள்ளி கொலுசு ஆகியவற்றை எடுத்துவைத்துக்கொண்டு யாரோ மர்ம ஆசாமிகள் நகைக்கு ஆசைப்பட்டு பிரியாவை கொலை செய்தது போல் ஏற்பாடு செய்து விட்டு யாருக்கும் தெரியாமல் மீண்டும் தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றுவிட்டார்.
அழுது நாடகமாடினார்
பின்னர் அங்கிருந்து செல்போனில் தனது வீட்டருகில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது என் மனைவிக்கு ஒரு மணி நேரமாக போன் செய்தேன். ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லை. எனவே நீங்கள் எங்கள் வீட்டிற்கு சென்று பிரியாவிடம் பேசச்சொல்லுங்கள் என்று கூறினார்.
அதன்படி அந்த பெண் அங்கு சென்று பார்த்துவிட்டு உங்களது மனைவி ரத்த காயங்களுடன் மூச்சு பேச்சின்றி விழுந்துகிடப்பதாக விஜயனிடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது மனைவியை கொலை செய்த விஜயன் அப்போதுதான் வீட்டிற்கு வருவது போல வந்து மனைவியின் உடலைப் பார்த்து அழுது புலம்பி நாடகமாடினார்.
கைது
பிரியா அணிந்திருந்த நகைகளை எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். போலீசார் விஜயன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அத்துடன். அவரிடமிருந்த நகைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு தனது மனைவியை கொலை செய்து விட்டு வாலிபர் நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.