விருப்பு, வெறுப்புகளை மறந்து தே.மு.தி.க. கட்சியை தொண்டர்கள் வலுப்படுத்த வேண்டும் விஜயபிரபாகரன் பேசினார்.
விருப்பு, வெறுப்புகளை மறந்து தே.மு.தி.க. கட்சியை தொண்டர்கள் வலுப்படுத்த வேண்டும் விஜயபிரபாகரன் பேசினார்.
திருப்பூர்:
விருப்பு, வெறுப்புகளை மறந்து தே.மு.தி.க. கட்சியை தொண்டர்கள் வலுப்படுத்த வேண்டும் என திருப்பூரில் நடந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில், அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன் பேசினார்.
பிறந்தநாள் விழா
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா திருப்பூர் மாநகர் மாவட்டம் மற்றும் சார்பு அணிகள் சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொடியேற்றப்பட்டு, திருப்பூர் பல்லடம் ரோடு டி.கே.டி. மில், மங்கலம் ரோடு டைமண்ட் தியேட்டர் அருகே, புதிய பஸ் நிலையம், பெருமாநல்லூர் அருகே ஆகிய இடங்களில் ஏழை, எளிய மக்கள் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் அக்பர், மாவட்ட அவைத்தலைவர் செல்வகுமார், பொருளாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தே.மு.தி.க.மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், சுரேஷ் குமரன், ஷர்மிளா பாரதி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் காளியப்பன், ராஜாமுகமது, பூபதி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கேப்டன் விஜயகாந்தின் குரல் மீண்டும் ஒலிக்கும். தேர்தலில் வெற்றி, தோல்வி அனைத்து கட்சிக்கும் வரும். ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொருவிதமாக இருக்கும். தே.மு.தி.க. கட்சி வேர் என்றும் அழியாது. அந்த வேர் ஆலமரமாக மாறிவிட்டது. எத்தனை விழுதுகள் கட்சியை விட்டு சென்றாலும், முளைத்துக்கொண்டே இருக்கும். இளைஞர்களுக்கு உறுதுணையாக தே.மு.தி.க. கட்சி இருக்கும். விஜயகாந்த் நலமாக இருக்கிறார். விரைவில் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக செல்கிறார்.
தொண்டர்கள் வலுப்படுத்த...
விருப்பு, வெறுப்புகளை மறந்து தே.மு.தி.க. கட்சியை தொண்டர்கள் வலுப்படுத்த வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து பிரசாரம் செய்தேன். வருகிற நாட்களிலும் பிரசாரம் செய்வேன். எத்தனை முறை தான் மக்கள் தூக்கி எறிந்தாலும், சுவற்றில் அடித்த பந்து போன்று மீண்டும் மக்கள் முன் வந்து நிற்போம்.
தே.மு.தி.க.விற்கு தாய்மார்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
அவ்வாறு கொடுத்தால் நிச்சயமாக தே.மு.தி.க. ஒரு நல்ல இடத்திற்கு வரும். கொரோனா காலம் என்பதால் அனைவரும் அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த 2006-ல் தே.மு.தி.க. எப்படி இருந்ததோ, அந்த இடத்திற்கு மீண்டும் கட்சி வருவதற்கு நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வந்தால், மக்களுக்கு நல்லது செய்யலாம். இதனால் தே.மு.தி.க.விற்கு மக்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். தே.மு.தி.க. துவண்டு போகாது. மக்களின் மனநிலையை மாற்றுவோம். அதற்கு தேவையான சக்தியும், திறமையும் அனைத்து தே.மு.தி.க. தொண்டர்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் தே.மு.தி.க.பகுதி செயலாளர்கள் கண்ணன், பார்த்திபன், குப்புசாமி, செந்தில்குமார், ராமு, பட்டேல், பிரபு, ஜீவா மற்றும் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், ரஹமதுல்லா, முத்து, பிரகாஷ், லிங்கராஜ், ஆனந்த், பர்கத், இளையராஜா, உமா, குமார், அம்ஜத் அலி, ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.