சேலத்தில் மகளை விஷம் கொடுத்து கொன்ற நூலகர்- தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

சேலத்தில் மகளை விஷம் கொடுத்து கொன்ற நூலகர், தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-24 22:37 GMT
கன்னங்குறிச்சி:
சேலத்தில் மகளை விஷம் கொடுத்து கொன்ற நூலகர், தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நூலகர்
சேலம் கோரிமேட்டை அடுத்த என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 50). சேலம் மத்திய நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வருகிறார். இவர், தன்னுடைய 3-வது மகள் ஹரிஷ்காவுடன் (20) வசித்து வந்தார். நேற்று முன்தினம் தியாகராஜன் வீட்டுக்கதவு நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், தியாகராஜன் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உறவினர்கள் விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, தியாகராஜனும், ஹரிஷ்காவும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
ஆஸ்பத்திரியில் சாவு
 தந்தை- மகள் இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ஹரிஷ்கா பரிதாபமாக இறந்தார். தியாகராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உருக்கமான தகவல்கள்
போலீசார் விசாரணையில் வெளியான உருக்கமான தகவல்கள் விவரம் வருமாறு:-
தியாகராஜனுக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் 1 மகனும் இருந்தனர். 2 மகள்கள், ஒரு மகனை திருமணம் செய்து கொடுத்து விட்டார். அவர்கள் வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். மனைவி மற்றும் 3-வது மகள் ஹரிஷ்காவுடன் வசித்து வந்தார். ஹரிஷ்கா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் அவருக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லையாம்.
ஹரிஷ்காவுக்கு நோய் குணமாகாததால் யாருக்கும் திருமணம் செய்து கொடுக்க முடியாத நிலை, தனக்கு பின்னால் மகளை யார் கவனிப்பார்கள் என்று தியாகராஜன் அடிக்கடி புலம்பி வந்ததாக தெரிகிறது.
கொலை
இதற்கிடையே தியாகராஜனின் மனைவி வெளியூர் சென்று இருந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் தியாகராஜன், தன்னுடைய மகள் ஹரிஷ்காவை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படியே விஷம் வாங்கி வந்து இரவில் மகளுக்கு கொடுத்து கொலை செய்து விட்டு தானும், தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்