ஓமலூர் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது; கணவன்- மனைவி உடல் கருகி சாவு- விபத்தில் பிச்சைக்காரரும் இறந்த பரிதாபம்

ஓமலூர் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது. இதில் கணவன்- மனைவி இருவரும் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பிச்சைக்காரரும் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-24 22:37 GMT
ஓமலூர்:
ஓமலூர் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி தீப்பிடித்தது. இதில் கணவன்- மனைவி இருவரும் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பிச்சைக்காரரும் பரிதாபமாக இறந்தார்.
பிச்சைக்காரர் பலி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூர் தீவட்டிப்பட்டியில் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற பிச்சைக்காரர் ஒருவர் மீது கன்டெய்னர் லாரி மோதியது.
இதில் அந்த பிச்சைக்காரர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். உடனே டிரைவர் கன்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். விபத்து நடந்தது இரவு நேரம் என்பதால் கன்டெய்னர் லாரிக்கு பின்னால் வந்த மற்ற வாகனங்கள் பிச்சைக்காரர் உடல் மீது ஏறிச் சென்றன.
தீப்பிடித்தது
அப்படி பிச்சைக்காரர் உடல் மீது ஏறிச் சென்ற கார் ஒன்று நிலைதடுமாறி சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த சோதனைச்சாவடி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தீப்பிடித்து எரிந்த காரில் இருந்து 5 பேரை மீட்டனர்.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரையும் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுதொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆஸ்பத்திரியில் சாவு
விசாரணையில் இறந்தவர் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்மலை என்பதும், காயம் அடைந்தவர்கள் பொன்மலையின் மனைவி சகுந்தலா (வயது 56) மற்றும் நித்திய குமாரி (38), சோபனா (35), மித்திரன் (5) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இதில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பொன்மலையின் மனைவி சகுந்தலா சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் கணவன்- மனைவி இருவரும் உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. பொன்மலை கிருஷ்ணகிரிக்கு குடும்பத்துடன் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்