சேலம் அருகே கிணற்றில் பட்டதாரி வாலிபர் பிணம்-போலீஸ் விசாரணை

சேலம் அருகே பட்டதாரி வாலிபர் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-08-24 22:36 GMT
சேலம்:
சேலம் அருகே பட்டதாரி வாலிபர் கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிணற்றில் பிணம்
சேலம் அருகே அயோத்தியாபட்டணம் அருள்ஜோதி காலனியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது. அவரது அருகில் பை ஒன்றும் கிடந்தது. தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் தினேஷ்சம்பத் (வயது 30) என்பது தெரியவந்தது.
உடனே செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். தினேஷ்சம்பத் உடலை கிணற்றில் இருந்து வெளியே மீட்டனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. தொடர்ந்து தினேஷ்சம்பத் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
எலக்ட்ரிக்கல் கடை
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், எம்.காம் பட்டதாரியான தினேஷ்சம்பத் சேலம் 4 ரோடு அருகே உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 21-ந் தேதி வேலைக்கு சென்ற தினேஷ்சம்பத் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அவர் கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது.
அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்