கொரோனா தடுப்பூசிக்கு மாற்று எதுவும் இல்லை; வெங்கையா நாயுடு பேச்சு

கொரோனா தடுப்பூசிக்கு மாற்று எதுவும் இல்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

Update: 2021-08-24 21:31 GMT
பெங்களூரு: கொரோனா தடுப்பூசிக்கு மாற்று எதுவும் இல்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

தனிமனித இடைவெளி

மத்திய அரசின் திட்டம்-புள்ளியியல் துறை மற்றும் கிவ் இந்தியா ஆகியவை சார்பில் தடுப்பூசி செலுத்துங்கள் (வேக்சினேட் இந்தியா) என்ற திட்ட தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாட்டில் கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனால் பொதுமக்கள் தவறாமல் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். 6 அடி இடைவெளியை பின்பற்றி அன்றாட பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொது வெளியில் இருக்கும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
அனைவரும் தவறமல் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். கொரோனா தடுப்பூசிக்கு மாற்று எதுவும் இல்லை. 
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

5 லட்சம் பேருக்கு தடுப்பூசி

அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கீழ் மட்டத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகளை போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உதவி செய்ய விரும்புபவர்கள், தனியார் நிறுவனங்கள், தடுப்பூசிகளை அரசுக்கு தானமாக வழங்க முன்வர வேண்டும். செப்டம்பர் மாதம் முதல் மாதத்திற்கு 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

 மாநிலத்தில் தற்போது தினமும் 3½ லட்சம் முதல் 4 லட்சம் வரை டோஸ் தடுப்பூசிகளை போட்டு வருகிறோம். கர்நாடகத்திற்கு மத்திய அரசு 1½ கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்க உள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

உள்ளூர் உணவுகளை உண்ணுங்கள்

முன்னதாக பெங்களூருவில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று பேசியதாவது:- 
உடல் நல ஆரோக்கியத்தை பராமரிக்க துரித மற்றும் சத்து இல்லா உணவுகளை தவிர்த்து, இந்திய பாரம்பரிய உணவுகளை மக்கள் உண்ண வேண்டும். துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாரம்பரிய, உள்ளூர் உணவுகளை உண்ணுங்கள். நம் முன்னோர்கள் பரிந்துரைத்து, ஊக்குவித்து நமக்கு அழகான உணவு வகைகளை வழங்கி உள்ளனர். நான் கர்நாடகத்தில் உள்ளேன். இங்கு எந்த வகை உணவு வகைகள் உள்ளன என்பதை நான் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. இங்குள்ள பாரம்பரிய உணவு உலக புகழ்பெற்று உள்ளது. 

உடல் ஆரோக்கிய செல்வம்

நம்முடைய பாரம்பரிய உணவு இருக்கும்போது ஏன் பீட்சா, பர்கர் போன்ற சத்து இல்லாத துரித உணவுகள் பின்னால் ஓட வேண்டும். பீட்சா, பர்கர் போன்ற சில துரித உணவு வகைகள் வெளிநாடுகளின் நிலைமைக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் அவை இந்திய நிலைமைகளுக்கு ஏற்றவை அல்ல. அவை நம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. சில நிறுவனங்கள் சந்தைப்படுத்தி நாடு முழுவதும் அந்த உணவுகளை பிரபலமாக்கியது. அதில் இருந்து நாம் விடுபட வேண்டும். பீட்சா, பர்கரை தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளை உண்ணுங்கள். 

சிக்கன் மஞ்சூரியன், சிக்கன்-65 போன்ற துரித உணவுகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் சொந்தமாக தயாரிக்கும் பிரியாணி இருக்கும்போது மஞ்சூரியன் எதற்காக சாப்பிட வேண்டும். கர்நாடகத்தில் அற்புதமான ராகி முத்தே (களி உருண்டை) மற்றும் நாட்டு கோழி குழம்பு இருக்கும்போது, நாம் ஏன் சிக்கன் மஞ்சூரியன், சிக்கன்-65 பின்னால் ஓட வேண்டும். 

தயவு செய்து மக்கள் இந்திய பாரம்பரிய உணவு வகைகளை பின்பற்றுங்கள். அவை தான் நம் உடல் ஆரோக்கியத்திற்கான செல்வம். 
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்