ரூ.20 லட்சம் அபேஸ் செய்தவர் கைது
ரூ.20 லட்சம் அபேஸ் செய்தவர் கைது செய்யப்பட்டார்
திருச்சி
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தாராநல்லூர் விஸ்வாஸ் நகரில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்சி கோட்டை சஞ்சீவி நகரை சேர்ந்த குணசேகரன் (வயது 31) 10 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வந்தார். பி.காம். பட்டதாரியான இவர் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று அங்குள்ள எந்திரங்களில் பணம் நிரப்பும் பணி செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருச்சி மாவட்டம் புறத்தாக்குடியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.40 லட்சம் வரை நிரப்பினார். அப்போது அவர்,ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.20 லட்சத்தை மட்டும் வைத்து விட்டு ரூ.20 லட்சத்தை அபேஸ் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் மாதம் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் நேற்று காலை பஸ்சுக்காக காத்து இருந்த குணசேகரனை கைது செய்தனர்.