சந்திரயான்-2 திட்ட தகவல்களை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பு

சந்திரயான்-2 திட்ட தகவல்களை பயன்படுத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.;

Update: 2021-08-24 20:28 GMT
பெங்களூரு: சந்திரயான்-2 திட்ட தகவல்களை பயன்படுத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்

நிலவின் புவியியல், மேற்பரப்பின் வயது, மேற்பரப்பின் அமைப்பு, கற்கள், தண்ணீர் இருப்பு குறித்து அறிந்து கொள்ள சந்திரயான்-1 திட்ட தகவல்கள் இந்திய அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிகள், நிலவின் பரிணாம வளர்ச்சி குறித்த நமது கருத்து ஓட்டங்களை அதிகரிக்க செய்துள்ளன. 

சந்திரயான்-1 திட்டத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற ஆராய்ச்சிகளால், இந்திய நிலவு அறிவியல் ஆராய்ச்சி சமுதாயம் வளர்ந்துள்ளது. நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சியாளர்களை மேலும் பலப்படுத்தும் வகையில் சந்திரயான்-2 ஆய்வு கருவிகள் குறித்த தகவல்கள், அறிவியல் ஆராய்ச்சிக்காக பொது வெளியில் வெளியிடப்பட்டு உள்ளன. 

அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். சந்திரயான்-2 விண்கலத்தின் கோளப்பதை நிலவை சுற்றிலும் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 8 வகையான ஆய்வு கருவிகளை அந்த விண்கலம் சுமந்து செல்கிறது. 

மேற்பரப்பு புவியியல், அதன் அமைப்பு, விண்வெளி அளவீடு ஆகிய ஆய்வு மூலம் நிலவின் நிலை குறித்து மேலும் பல புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி ஆய்வு கருவிகளின் தகவல்கள் பொது பார்வைக்காக வெளியிடப்பட்டன.

புதிய தகவல்கள்

அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 2-வது கட்ட ஆய்வு கருவிகளின் தகவல்கள் வெளியிடப்பட்டன. இது குறித்த சில அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் சர்வதேச ஆராய்ச்சி புத்தகங்களில் வெளியாகியுள்ளது. மேலும் பல புதிய தகவல்கள் வெளியிடப்படும். இந்த சந்திரயான்-2 விண்வெளி திட்ட ஆய்வு கருவிகளின் தகவல்களை ஆராய்ச்சி செய்ய தேசிய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் முன்வந்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தகவல்களை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு அமைப்புகள் இந்த தகவல்களை ஆராய முன்வரலாம்.
இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.

மேலும் செய்திகள்