புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

வாரணவாசியில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டது.

Update: 2021-08-24 20:25 GMT
அரியலூர்:

கடல்வாழ் உயிரின படிமங்கள்
அாியலூர் மற்றும் பெரம்பலூா் மாவட்ட பகுதிகள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்தது. காலநிலை மாற்றங்களால் கடல் உள்வாங்கிய நிலையில், கடல்வாழ் உயிரினங்கள் மண்ணில் புதைந்து படிமங்களாக மாறின. இதைத்தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் பல அரியலூர் மாவட்டத்தில் கிடைத்தன. மேலும் டைனோசர் முட்டை கல்லாக மாறிய படிமமும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் சாத்தனூர் பகுதியில் கல் மரம் உள்ளது. இதுபோன்ற படிமங்கள், புவியியல் மாணவர்களின் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், அரியலூர் அருகே உள்ள வாரணவாசியில் தமிழக அரசு சார்பில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இங்கு கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியம் திறப்பு
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் புவியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அரியலூர் பகுதிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டு, இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்வார்கள். பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, அங்குள்ள பொருட்களை கண்டு ஆச்சரியமடைவது உண்டு.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அந்த அருங்காட்சியம் மூடப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை தொடர்ந்து, அந்த அருங்காட்சியம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏராளமான மாணவ, மாணவிகள் அருங்காட்சியகத்திற்கு வருவார்கள் என்று அருங்காட்சியக பொறுப்பாளர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்