சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு பொதுமக்கள் வரவேற்பு
சிவகாசி, மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு பொதுமக்கள் வரவேற்றனர்.
சிவகாசி,
சிவகாசி, மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு பொதுமக்கள் வரவேற்றனர்.
தரம் உயர்வு
சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.
இது சிவகாசி நகர மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார்.
பின்னர் அதற்கான பணிகள் தொடங்கி முடிந்த நிலையில் மாநகராட்சியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சிவகாசியை தரம் உயர்த்த தற்போதைய அரசு கவனம் செலுத்தி வருவது சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வரவேற்பு
கடந்த 1920-ல் சிவகாசி நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1978-ல் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1988-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
1998-ல் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 2017-ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்படி படிப்படியாக தரம் உயர்ந்து வரும் நகராட்சி தான் இப்போது 101 ஆண்டுகளுக்கு பின்னர் மாநகராட்சி அந்தஸ்தை எட்டிபிடிக்க உள்ளது. இது இங்குள்ள வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியதுடன், பெரும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
குட்டி ஜப்பான்
சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக அரசு தரம் உயர்த்த முடிவு செய்துள்ளதால் இந்த பகுதியில் உற்பத்தியாகும் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சு தொழில் மேலும் வளர்ச்சி அடையும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதிக்கு மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்கள் அதிக அளவில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தொழிலாளர்கள் அதிகம் உள்ள இந்த குட்டி ஜப்பான் இனி அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசி நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டது. இதன் தொடக்கவிழாவின் போது அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அலுவலகம் கட்டும்போதே அந்த அலுவலகம் மாநாகராட்சி அலுவலகமாக மாற்ற தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி கட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
அதன்படி தான் நகராட்சி அலுவலகமும் புதிய இடத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி கட்டப்பட்டது.