பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளிப்பு
நெல்லையில் பள்ளிக்கூடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.;
நெல்லை:
நெல்லையில் பள்ளிக்கூடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.
கொரோனா பரவல்
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் தற்போது 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. வெளிமாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று கூறி முககவசம் அணிந்து மட்டுமே பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பள்ளி, கல்லூரி
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது 9-ம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது.
இதையொட்டி நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களிலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
மேலும் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் ரவுண்டானா பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் நின்றுகொண்டு அங்கு வருகின்ற பஸ்கள் மற்றும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தனர்.
திறனாய்வு தேர்வு
நெல்லை மாவட்டத்தில் திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி பெறுகின்ற மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார்கள். நெல்லை டவுன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு எப்படி திறனாய்வு தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியை விளக்கி பாடம் நடத்தினார்.