நெல்லையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
நெல்லையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நவீன உயர்தர கணினியை கையாள்வது குறித்த பயிற்சி முகாம் இணையதளம் மூலம் கற்றுத்தரப்படுகிறது.
முதல்கட்டமாக மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இந்த பயிற்சி முகாம் நெல்லை டவுன் அரசு ஜவகர் உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையதளம் மூலம் இந்த பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நவீன சாப்ட்வேர் முறையில் பாடத்திட்டங்களை கணினியில் பதிவேற்றுவது எப்படி?, கணினியில் சேமித்து மற்றும் மாணவர்களுக்கு கணினி மூலம் கற்றுத் தருவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. பள்ளியில் நடந்த பயிற்சியை பள்ளி தலைமை ஆசிரியை மாலா ஆய்வு செய்தார்.