தந்தை-மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தொழில் போட்டி காரணமாக மயான தொழிலாளியை வெட்டிக் கொன்ற தந்தை-மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update: 2021-08-24 18:46 GMT
நாகப்பட்டினம்:
தொழில் போட்டி காரணமாக மயான தொழிலாளியை வெட்டிக் கொன்ற தந்தை-மகன்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தொழில் போட்டி
நாகை மாவட்டம் கரியாப்பட்டினத்தை அடுத்த கத்திரிப்புலம் பனையடி குத்தகையை சேர்ந்த சுப்பையன் என்பவரது மகன் செல்லக்கண்ணு(வயது 40). மயான தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி (37). 
இவர்களது வீட்டின் அருகே அன்பழகன்(52) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். செல்லக்கண்ணுக்கும், அன்பழகனுக்கும் மயான தொழில் செய்வதில் போட்டி இருந்து வந்தது. 
முன்விரோதம்
இதன் காரணமாக இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதியன்று இரவு செல்லக்கண்ணு தனது மனைவி கலைச்செல்வியுடன் வீட்டில் இருந்தார். 
அப்போது அங்கு அன்பழகன், அவரது மகன்கள் பாபு(26), கோபு(22) மற்றும் அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த நாகமுத்து என்பவரது மகன் ரஞ்சித்(23) ஆகிய 4 பேர் வந்தனர்.
சரமாரியாக வெட்டினர்
இதையடுத்து வீட்டில் இருந்த செல்லக்கண்ணுவை வெளியில் வரவழைத்து,அவருடன் மயான தொழில் சம்பந்தமாக தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றவே 4 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், செல்லக்கண்ணுவை சரமாரியாக வெட்டினர். 
இதை தடுக்க வந்த செல்லக்கண்ணுவின் மனைவி கலைச்செல்விக்கும், அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்லக்கண்ணுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
பரிதாப சாவு
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
இது குறித்து செல்லக்கண்ணுவின் மனைவி கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவரது மகன்கள் பாபு, கோபு மற்றும் ரஞ்சித் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
4 பேருக்கு ஆயுள் தண்டனை
இது தொடர்பான வழக்கு நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கிங்ஸ்லிகிறிஸ்டோபர் தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், செல்லக்கண்ணுவை அரிவாளால் வெட்டி கொலை செய்த அன்பழகன் மற்றும் அவரது மகன்கள் பாபு, கோபு ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.1,500 அபராதமும், ரஞ்சித்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து இவர்கள் 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்

மேலும் செய்திகள்