ஜோலார்பேட்டை அருகே; வீட்டின் அருகே விளையாடிய 1½ வயது குழந்தை மாயம்

ஜோலார்பேட்டை அருகே வீட்டின் அருகே விளையாடிய 1½ வயது குழந்தை மாயமானாள்.;

Update: 2021-08-24 18:33 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி குன்னத்தூர் வெள்ளைய கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். 

இவர் கோயம்புத்தூரில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி. திருமணமாகி 3 வருடங்களாகிறது. இவர்களுக்கு நிக்கிஷா என்ற 1½ பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில்  சிறுமி நிக்கிஷா வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். 

அப்போது திடீரென காணாமல் போய்விட்டாள். இது குறித்து சுந்தரத்தின் சகோதரர் பாண்டியன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

உடனடியாக இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தகவலறிந்ததும் திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கமும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். 

அப்போது அங்கிருந்த பொது மக்கள், நீண்ட நேரமாக அந்தப்பகுதியில் ஒரு கார் நின்றிருந்ததாகவும், அந்த காரில் குழந்தையை கடத்தியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர். 

இதில் துப்பு துலக்க வேலூரில் இருந்துசிம்பா, திருவண்ணாமலையில் இருந்து மியா என்ற 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. அவை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஓடி ஓட்டுக்காரன் வட்டம் என்ற இடத்தில் நின்று விட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீஸ்சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, மணிமாறன், ஹேமாவதி, சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்