100 நாள் வேலை கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
கந்தர்வகோட்டை:
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கந்தர்வகோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை செய்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்காக 100 நாள் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை 100 நாள் வேலை இந்த ஊராட்சியில் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் இதில் பணியாற்றிய ஆண்கள் மற்றும் பெண்கள் வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருந்தனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் மீண்டும் 100 நாள் வேலை தொடங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் மீண்டும் பணியை தொடங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.