அரிமளம் அருகே சரக்கு வேன் மோதி தனியார் பஸ் டிரைவர் பலி எல்லை பிரச்சினையால் போலீசாருக்கு இடையே குழப்பம்

அரிமளம் அருகே சரக்கு வேன் ேமாதி தனியார் பஸ் டிரைவர் பலியானார். விபத்து நடந்த எல்லை யாருடையது என்பதில் பிரச்சினையால் போலீசாருக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது.

Update: 2021-08-24 17:49 GMT
அரிமளம்:
டிரைவர் பலி 
புதுக்கோட்டையிலிருந்து அரிமளம் நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அரிமளத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கி அரிமளம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் முருகானந்தம் (வயது 40) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கடையக்குடி கிராமம் அருகே உள்ள உப்புபட்டி பிரிவு சாலை அருகே வந்த போது, சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. 
 மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்துகொண்டிருந்த, மற்றொரு சரக்கு வேன் முருகானந்தம் மீது மோதிய சரக்கு வேன் மீது மோதி சாலை இடதுபுறம் உள்ள பள்ளத்தில் இறங்கியது. முருகானந்தம் மீது மோதிய சரக்கு வேன் வலதுபுறம் உ ள்ள பள்ளத்தில் கவிழ்த்தது. இச்சம்பவத்தில் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முருகானந்தத்திற்கு கவிதா என்ற மனைவியும் 3 குழந்தைகள் உள்ளனர். 
போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே குழப்பம் 
இந்த சம்பவம் நடைபெற்ற இடம் எந்த காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வருகின்றது என்பதில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே புதுக்கோட்டை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர், கணேஷ் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர், திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அங்கு வந்து யாருடைய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என ஆலோசனை செய்தனர். இதற்கிடையே போலீசார்கள் முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் ஒரு முடிவிற்கு வர முடியாததால் உடனடியாக அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்தனர். 3 போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உப்புபட்டி அருகே உள்ள பாலம் தொடக்க எல்லை வரை கணேஷ் நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்றும், உப்பு பட்டி அருகே உள்ள வெள்ளாற்று பாலம் ஆரம்ப பகுதி முதல் திருக்கோகர்ணம் போலீஸ் துறையினருக்கு என விளக்கமளித்தனர். 
சரக்கு வேன் டிரைவர்கள் படுகாயம் 
ஒருவழியாக சம்பவம் நடைபெற்ற இடம் கணேஷ் நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னரே கணேஷ் நகர் போலீசார் புகார் மனு பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர். விபத்து நடைபெற்ற இடம் எந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என தெரியாததால் யாரிடம் புகார் கொடுப்பது என தெரியாமல் உயிர் இழந்த முருகானந்தத்தின் உறவினர்கள் விழி பிதுங்கினார்கள். இந்த விபத்தில் 2 சரக்கு வேன்களின் டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்