ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை திருக்குறள் எழுத வைத்து தண்டனை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை திருக்குறள் எழுத வைத்து தண்டனை வழங்கப்பட்டது.

Update: 2021-08-24 17:35 GMT
திண்டுக்கல்: 

ஹெல்மெட் கட்டாயம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதை மீறும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.


இதற்கிடையே கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில நாட்களாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் நின்று ஹெல்மெட் அணியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் பலர் ஹெல்மெட் அணியாமலேயே வருகின்றனர்.

திருக்குறள் எழுதினர் 
இந்த நிலையில் நேற்று காலையில் திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன் தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஹெல்மெட் அணியாமல் வந்த பலர் போலீசாரிடம் சிக்கினர். இதற்கிடையே அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஹெல்மெட் அணியும்படி வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து ஹெல்மெட் அணியாதவர்களை திருக்குறள் எழுத வைத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர். அதன்பின்னர் போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் வாகன ஓட்டிகள் அனைவரும் இனிமேல் ஹெல்மெட் அணிவோம் என்று கையை நீட்டி உறுதிமொழி எடுத்தனர். மேலும் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்