கருடா செல்போன் செயலி பயன்பாடு குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது

கிருஷ்ணகிரியில் கருடா செல்போன் செயலி பயன்பாடு குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது.;

Update: 2021-08-24 17:07 GMT
கிருஷ்ணகிரி,

அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கருடா என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் பயன்பாடு குறித்த பயிற்சி நேற்று நடந்தது. இதை தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ சென்னையில் இருந்து, காணொலி காட்சி மூலமாக நேற்று தொடங்கி வைத்தார்.

இதையொட்டி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற பயிற்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயசந்திர பானுரெட்டி தலைமை தாங்கினார். இதில் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

அடிப்படை வசதிகள் 

நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடியில் உள்ள அடிப்படை வசதிகள், வாக்காளர் விவரங்கள், வாக்குச்சாவடி தொடர்பான விவரங்கள் உள்ளீடு செய்திடவும், அதனை அவ்வப்போது புதுப்பிக்கவும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கருடா என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த பயிற்சியில் தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு காணொலி காட்சி மூலம் கருடா செல்போன் செயலி குறித்து விளக்கி கூறினார்.

இந்த பயிற்சியில் உதவி கலெக்டர்கள் நிஷாந்த் கிருஷ்ணா, சதீஸ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் முருகேசன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்