கூடைப்பந்து போட்டி; பெரியகுளம் அணி சாம்பியன்

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம் பி.டி.சி. அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Update: 2021-08-24 16:54 GMT
பெரியகுளம்:
பெரியகுளம் பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியகுளம், போடி, தேனி, கூடலூர், வடுகப்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. இதில், இறுதிப்போட்டிக்கு வடுகப்பட்டி, பெரியகுளம் பி.டி.சி. அணிகள் தகுதி பெற்றன. 
பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெரியகுளம் பி.டி.சி. அணி 100-68 என்ற புள்ளிக்கணக்கில் வடுகப்பட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. முன்னதாக நடைபெற்ற 3-ம் இடத்திற்கான போட்டியில் பெரியகுளம் கேப்பிட்டல் அணியும், தேனி எஸ்.எஸ். அணியும் விளையாடியது. இதில் பெரியகுளம் அணி 68-52 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, 3-ம் இடத்தை பிடித்தது. 
இதைத்தொடர்ந்து வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சிதம்பர சூரியவேலு தலைமை தாங்கினார். இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன், இந்திய கூடைப்பந்து அணியின் பயிற்சியாளர் தினகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர். 
முன்னதாக ஸ்போர்ட்ஸ் அகாடமி செயல் தலைவரும், பயிற்சியாளருமான சுப்புராஜ் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் வடுகப்பட்டி டாக்டர் செல்வராஜ், கூடைப்பந்து கழக பொருளாளர் பிரபு, அகாடமி மேலாளர் ரவி,தொழிலதிபர் லக்கிசலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்