குமுளியில் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
குமுளியில் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூர்:
தமிழகம் மற்றும் கேரளாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது ஒரு தவணை தடுப்பூசி மற்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து கேரளாவில் ஏலக்காய் தோட்டங்கள் வைத்திருக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும், தோட்ட தொழிலாளர்களும் 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை காண்பித்து கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை குமுளி வழியாக தோட்ட தொழிலாளர்கள் சிலர் கேரளாவுக்கு செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய கேரள வருவாய்த்துறை அதிகாரிகள், இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். அப்போது அவர்கள், 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழை காட்டினர். ஆனால் அதை ஏற்காத அதிகாரிகள், திருப்பி அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த தோட்ட தொழிலாளர்கள், கேரள அதிகாரிகளை கண்டித்து தமிழக எல்லை போலீஸ் சோதனைச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம் தமிழக போலீஸ் சோதனைச்சாவடி சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், கேரள அதிகாரிகளிடம் பேசி தோட்ட தொழிலாளர்களை கேரளாவுக்குள் செல்ல அனுமதி பெற்று தந்தனர். இதனால் தமிழக-கேரள எல்லையான குமுளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.