காங்கேயம் அருகே அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
காங்கேயம் அருகே அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
காங்கேயம், ஆக.25-
காங்கேயம் அருகே அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே அரிசி ஆலை நடத்தி வருபவர் தொழிலதிபர் ஈஸ்வரமூர்த்தி. இவரது மகன் சிவபிரதீப் (வயது 22). கடந்த 22-ந்தேதி மதியம் சிவபிரதீப்பும், அவரது கார் டிரைவரான சதாம்உசேனும் (27) காரில் சென்றபோது அவர்களை 7 பேர் கும்பல் கைகளை கட்டிப்போட்டு கடத்திச் சென்றனர்.
பின்னர் சிவபிரதீப்பின் தந்தை ஈஸ்வரமூர்த்திக்கு போன் செய்து ரூ.3 கோடி கேட்டு மிரட்டினர். பணம் தராவிட்டால் சிவபிரதீப்பை கொன்று புதைத்து விடுவதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவருடைய மாமா ஆகியோர் அன்று இரவு 7.30 மணியளவில் அந்த கும்பல் கூறிய குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ரூ.3 கோடி கொடுத்தனர். அதை பெற்ற அந்த கும்பல் சிவபிரதீப், சதாம் உசேன் ஆகியோரை விடுவித்து விட்டு பணத்துடன் தலைமறைவானார்கள்.
5 பேர் கைது
இதைத் தொடர்ந்து காங்கேயம் தனிப்படை போலீசார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட திண்டிவனம் குலமங்கலம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (37), மதுரையை சேர்ந்த அகஸ்டின் (45), ஆந்திர மாநிலம், நெல்லூர் எ.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த பாலாஜி (38) ஆகியோரை மதுரையில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த பசீர் (32) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணகிரி பழைய பேட்டை முகமது கவுஸ் சாகிப் பாயு தெருவை சேர்ந்த சையத் அகமதுல்லா (45) என்பவரை நேற்று முன் தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம், பழனி கீரனூர் பகுதியைச் சேர்ந்த கலிபுல்லா என்பவரின் மகன் ஜாபர் சாதிக் (37) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரில் 6 பேரை தனிப்படை போலீசார் 2 நாட்களில் கைது செய்துள்ளனர். கைதான 6 பேரிடம் இருந்து இதுவரை ரூ.2 கோடியே 49 லட்சத்து 99 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த பாலன் என்பவர் விரைவில் கைது பிடிபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
-------
கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்