சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்; அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆத்திரத்தில் சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் முத்துவேல் லே-அவுட் 7-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 49). சமூக ஆர்வலர். முத்துவேல் லே-அவுட்டுக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் 58 சென்ட் அளவில் உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் நகரமன்ற கவுன்சிலரான தங்கசேகர் மற்றும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதுசம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராஜேந்திரனை தங்கசேகர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு
இதுகுறித்து ராஜேந்திரன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தங்கசேகர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் திட்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.