அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் நலவாரியங்களை பாதுகாக்க வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம், தொழிலாளர் நலவாரியங்களை பாதுகாக்க வேண்டும், நலவாரியங்களில் தொழிற்சங்கங்கள் மூலம் நேரடி பதிவு புதுப்பித்தல், பணப்பயன்கள், இ.எஸ்.ஐ., வீட்டுவசதி, இடம்பெயரும் தொழிலாளர் கட்டாயப்பதிவை அமல்படுத்த வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் ஜெயபால் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
இதில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் செல்லப்பன், பொருளாளர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.