தூத்துக்குடி விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பயிர் காப்பீடு
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைபடுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி நடப்பு ஆண்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், கருங்குளம், உடன்குடி, ஒட்டப்பிடாரம், கயத்தார், தூத்துக்குடி வட்டாரங்களில் உள்ள 25 குறு வட்டங்களில் வாழை பயிரும், கயத்தார் வட்டாரத்தில் உள்ள 1 குறுவட்டத்தில் வெண்டைப் பயிரும், கயத்தாறு மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் உள்ள 6 குறுவட்டங்களில் மிளகாய் பயிரும், கருங்குளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தாறு வட்டாரங்களில் உள்ள 8 குறுவட்டத்தில்; வெங்காயம் பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் வங்கிகளில் கடன்பெறும் விவசாயிகள், அவர்களின் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன்பெறாத விவசாயிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். எனவே நடப்பு காரீப் பருவத்தில் மேற்கூறிய பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் எதிர்பாராத இடர்பாடுகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகளில் இருந்து காத்துக் கொள்ள இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாழை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 15-ந்தேதி ஆகும்.வெண்டை, வெங்காயம், மிளகாய் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும்.
ஆவணங்கள்
பயிர் காப்பீட்டு செய்ய வாழை ஏக்கருக்கு ரூ.3210, வெண்டை ரூ.805, வெங்காயம் ரூ.982, மிளகாய் ரூ.841.25, காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு படிவத்துடன், பதிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். இறுதி நேர நெரிசலை தவிர்த்து அனைத்து விவசாயிகளும் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.