தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
மாணவர்கள் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் பழனி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழிற்பயிற்சி நிலையம்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களான தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையங்கள் மாணவர்கள் சேர்க்கைக்கு கடந்த 4-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 15.9.21 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதிச்சான்றிதழ், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு, அசல் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றுடன் தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
சலுகைகள்
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், பாடப்புத்தகம், லேப்டாப், வரைபடக்கருவிகள், சீருடை, காலனி, பயிற்சிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.