மீஞ்சூர் அருகே மின்சார ரெயில் மோதி மூதாட்டி பலி
மீஞ்சூர் அருகே பழைய நாப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் தருமன். இவரது மனைவி லட்சுமி (வயது 77). இவர் மீஞ்சூரில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு நேற்று வந்தார்.
அப்போது, மீஞ்சூர் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது, இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து ரெயிலில் சிக்கி பலியான லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.