அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில இளம்பெண் தீ்க்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடும்பம் நடத்த மறுப்பு
திருமுல்லைவாயல் மூர்த்தி நகர் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 25). இவர், 23-12-2019 அன்று அம்பத்தூர் பகுதியை சேர்ந்த எல்லப்பன் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையில் எல்லப்பனுக்கு, சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால் கடந்த ஒரு மாதமாக எல்லப்பன், கவிதாவை விட்டு பிரிந்து அந்த பெண்ணுடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டதால் கவிதாவை எல்லப்பன் மிரட்டியதுடன், அவருடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
தீக்குளிக்க முயற்சி
இதையடுத்து கவிதா, தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மதியம் ஆவடியில் உள்ள அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகம் வந்தார். அப்போது அவர், அலுவலக நுழைவு வாயிலில் நிறுத்தி இருந்த துணை கமிஷனர் கார் முன்பு திடீரென தான் தயாராக பாட்டிலில் கொண்டு வந்து இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து துணை கமிஷனர் மகேஷ், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து கவிதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.